அப்பாவின் நடிப்பைப் பார்த்து அழுத சம்பவம்: துருவ் விக்ரம் பகிர்வு

அப்பாவின் நடிப்பைப் பார்த்து அழுத சம்பவம்: துருவ் விக்ரம் பகிர்வு
Updated on
1 min read

விக்ரமின் நடிப்பைப் பார்த்து தான் அழுத சம்பவத்தை துருவ் விக்ரம் கூறியுள்ளார். அவருடைய நடிப்பு அத்தகைய தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தீப் வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதன் இந்தி ரீமேக்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் உருவாகியுள்ளது.

'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரமுடன் நடித்துள்ள இந்தப் படம் நாளை (நவம்பர் 22) வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளின்போது துருவ் விக்ரம் பேசியதாவது:

'' 'அந்நியன்' படம் பார்த்துக் கொண்டிருந்த போது அப்பா என் பக்கத்தில்தான் அமர்ந்திருந்தார். வில்லன்கள் அவரை அடிக்கும் காட்சிகளில் நான் அழுதேன். அவருடைய மகனாக இல்லாமல், அவருடைய நடிப்பு அத்தகைய தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியது. பார்வையாளர்களுக்கு உணர்வு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் படங்களில் நடிக்க விரும்புகிறேன். தமிழ் சினிமாவுக்கு எளிதாக நுழைய முடிந்ததற்கு என் அப்பாவுக்கு நன்றி ஆனால் எனக்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. அழுத்தமான உணர்வுகளை ஏற்படுத்தும் 'அசுரன்' போன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

'தில்', 'தூள்' போன்ற கமர்ஷியல் படங்களையும் நான் ரசிக்கிறேன். ஆனால் இப்போது சினிமாவின் நுணுக்கங்களை பார்வையாளர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் படங்களைத் தரம் பிரித்து, கலைப் படைப்புகளையும், பட உருவாக்கத்தையும் ரசிக்கிறார்கள். எனவே அவர்களின் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்யவேண்டும்''.

இவ்வாறு துருவ் விக்ரம் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in