

'சேது' படத்துக்கு முன்பாக என் அப்பா மிகவும் கஷ்டப்பட்டிருந்த சமயத்தில் அவர் சினிமாவைக் கைவிட வேண்டும் என்று என் அம்மா தினமும் பிரார்த்தனை செய்தார் என்று துருவ் விக்ரம் கூறியுள்ளார்.
சந்தீப் வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இதன் இந்தி ரீமேக்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் உருவாகியுள்ளது.
'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா இயக்கியுள்ளார். பனிடா சாந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் துருவ் விக்ரமுடன் நடித்துள்ள இந்தப் படம் நாளை (நவம்பர் 22) வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளின்போது துருவ் விக்ரம் பேசியதாவது:
'' 'சேது' படத்துக்கு முன்பாக என் அப்பா மிகவும் கஷ்டப்பட்டிருந்த சமயத்தில் அவர் சினிமாவைக் கைவிட வேண்டும் என்று என் அம்மா தினமும் பிரார்த்தனை செய்தார். பின்னாட்களில் 'சேது' படத்தையும் அதில் என் அப்பாவின் கடின உழைப்பையும் பார்த்த பிறகு, அவருக்கு இன்று வரை உறுதுணையாக இருந்து வருகிறார். வாழ்க்கையில் சில விஷயங்கள் கைகொடுக்கும் என்று என் அப்பாவுக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது.
என்னை சினிமாவுக்குள் கொண்டு வருவதற்காக அவர் 'அர்ஜுன் ரெட்டி' ரீமேக்கைத் தேர்ந்தெடுத்தார். 'ஆதித்ய வர்மா'வுக்காக நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்த என் அப்பாவின் மேல் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அந்தப் படம் நன்றாக வருவதற்காக அவருடைய பொன்னான நேரத்தை செலவு செய்தார்.
ஒருவேளை அவர் என் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்காக மட்டும் மெனக்கெட்டிருந்தால அது சுயநலமாக பார்க்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் ஒவ்வொரு காட்சியையும் மேற்பார்வை செய்தார். அனைத்து நடிகர்களின் நடிப்பிலும் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டார். தான் ஒரு பெரிய நடிகர் என்பதை மறந்து என் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்''.
இவ்வாறு துருவ் விக்ரம் பேசினார்.