

பொன் ராம் இயக்கத்தில் உருவாகி வந்த 'எம்.ஜி.ஆர் மகன்' படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'சீமராஜா' படத்தைத் தொடர்ந்து, பொன் ராம் தனது அடுத்தப் படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். முதலில் விஜய் சேதுபதி நடிக்கும் படமொன்றை இயக்க ஒப்பந்தமானார். ஆனால், அந்தப் படம் தாமதமானதால் புதிய கதையொன்றை எழுதினார். அதில் சசிகுமார் நடிக்க, புதிய கூட்டணி உருவானது.
ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் துவங்கப்பட்டது. இதில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்து வந்தார்கள். ஒரே கட்டமாக 95% சதவீதக் காட்சிகளையும் தேனியிலேயே படமாக்கி முடித்துள்ளது படக்குழு.
இதன் மூலம் தனது காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டதாக, சசிகுமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது படக்குழு. எடிட்டிங் பணிகள் முடிவடைந்தவுடன், சேர்க்க வேண்டிய காட்சிகளைப் படமாக்கி முடித்து பூசணிக்காய் உடைக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு.
இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமியும், இசையமைப்பாளராக அந்தோணி தாசனும், விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும் மற்றும் துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர்.