

நவம்பர் 22-ம் தேதி கமலுக்கு, காலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் ஓய்வெடுக்கவுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல். இதன் படப்பிடிப்புக்கு இடையே தனது பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் திரையுலகிற்கு வந்து 60-ம் ஆண்டு கொண்டாட்டம் ஆகியவற்றையும் முடித்துள்ளார். இந்தப் பணிகளுக்கு இடையே மக்கள் நீதி மய்யத்தின் கட்சிப் பணிகளையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில் கமலுக்கு நாளை (நவம்பர் 22) காலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் ஓய்வில் இருக்கப் போவதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக கமலின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அம்முறிவினைச் சரி செய்வதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்று பொருத்தப்பட்டது.
அரசியல் மற்றும் சினிமாவில் கமலுக்கு இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அக்கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி கமல்ஹாசனுக்கு நாளை (நவம்பர் 22) அக்கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்விற்குப் பின் கமல் நம்மைச் சந்திப்பார்'' என்று ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.