

கேளிக்கை வரி விலக்கு தொடர்பான முடிவுகளை மாநில அரசு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் எடுக்க வேண்டும், தேவையற்ற தாமதம் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தங்களது ஏழாம் அறிவு திரைப்படத்துக்கு காலதாமதமாக கேளிக்கை வரி வழங்கி அதன் பயனை கிடைக்க விடாமல் செய்யப்பட்டுவிட்டது என்றும், இந்தப் படத்துக்கு பிறகு வெளியான பல படங்களுக்கு உடனடியாக கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, தமிழக அரசின் வணிக வரித்துறையினரால் கொண்டு வரப்பட்ட அரசாணைகளை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது:
கேளிக்கை வரி விலக்கு கோரி விண்ணப்பம் செய்யப்பட்டிருக்கும் போது தகுதியின் அடிப்படையில் வரிவிலக்குக்கு பரிந்துரை செய்யும் குழு 2 வாரங்களுக்குள் திரைப்படத்தை தங்களுக்கு திரையிட அழைப்பு விடுக்க வேண்டும்.
இந்த கேளிக்கை வரி விலக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து 3 நாட்களுக்குள்ளாக பரிந்துரை குழு மேற்கூறிய அழைப்பை படத் தயாரிப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒருவாரத்துக்குள் பரிந்துரைக் குழுவுக்கு படத்தை திரையிட தயாரிப்பாளர் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பிறகு பரிந்துரை குழு தங்கள் பரிந்துரைகளை ஒரு வார காலத்துக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும்.
மாநில அரசு பரிந்துரைகள் மீதான முடிவை 2 வார காலங்களுக்குள் எடுக்க வேண்டும். விண்ணப்பங்களின் தேதி வரிசைப்படி கேளிக்கை வரி விலக்குக்கு பரிசீலிக்கப்பட வேண்டும். மேலும், கேளிக்கை வரி விலக்கு தாமதத்துக்கான பயன் எதையும் மனுதாரர் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.