என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்: ரஜினி நெகிழ்ச்சி

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்: ரஜினி நெகிழ்ச்சி
Updated on
1 min read

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு விருதை அர்ப்பணிக்கிறேன் என்று 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' விருதைப் பெற்றுக்கொண்ட ரஜினி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு இது 50-வது ஆண்டாகும். எனவே இதனை மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாட முடிவு செய்துள்ளார்கள். இதன் தொடக்க விழா கோவாவில் இன்று (நவம்பர் 20) நடைபெற்றது.

விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றினர். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்வில், சங்கர் மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ரஜினிக்கு 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' என்ற மத்திய அரசின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றுக்கொண்டு ரஜினி பேசும்போது, "கோவா முதல்வருக்கும், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும், எனது இன்ஸ்பிரேஷன் அமிதாப்புக்கும், வந்திருக்கும் அனைத்துப் பிரமுகர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் மாலை வணக்கம்.

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தப் பெருமைக்குரிய ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி விருதைப் பெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த மதிப்புமிக்க விருதை எனக்குத் தந்து கவுரவித்ததற்கு, இந்திய அரசாங்கத்துக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்த விருதை என் படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். எல்லாவற்றையும் தாண்டி, என் ரசிகர்கள், என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். நன்றி" என்று பேசினார் ரஜினி.

மேலும், இந்த விழாவில் அமிதாப் பச்சனுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்படுகிறது. அவரைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த வருடம், 76 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்களும், இந்திய மொழிகளைச் சேர்ந்த 41 படங்களும் திரையிடப்படுகின்றன. இதில், பார்த்திபன் இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 2 தமிழ்ப் படங்கள் திரையிடப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in