

உனக்குப் பிடித்தாலும் இல்லையென்றாலும் எனக்கு உன்னைப் பிடிக்கும் என சகோதரர் அருண் விஜய்க்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.
கருத்து வேறுபாட்டால் வனிதா விஜயகுமாருடன், விஜயகுமார் உள்ளிட்ட எந்தக் குடும்ப உறுப்பினர்களும் பேசுவதில்லை. ஆனால், தன் தந்தை உள்ளிட்ட பிறந்தவீட்டார் மீது பாசமாகவே இருக்கிறார் வனிதா. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கூட தந்தை பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 19) பிறந்த நாள் கொண்டாடிய சகோதரர் அருண் விஜய்க்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.
“கருத்து வேறுபாடுகள் என்பவை தீர்த்துக்கொள்ளக் கூடியவை. ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரே ரத்தம். நானும் நீயும் அவரவர் பயணங்களில் இருக்கலாம். ஆனால், நாம் ஒன்றாகத் தொடங்கினோம். நாம், நம் குடும்பத்தைப் பெருமைப்படுத்த வேண்டும். நாம் இருவரும் ஒரே மாதிரி இருந்ததுதான் நம்மை வித்தியாசமாக ஆக்கியது. பிறந்த நாள் வாழ்த்துகள் அருண் விஜய். உனக்குப் பிடித்தாலும் இல்லையென்றாலும் எனக்கு உன்னைப் பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார் வனிதா விஜயகுமார்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட வனிதா விஜயகுமார், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சந்திரலேகா’ சீரியலில் நடித்து வருகிறார். வனிதா ஹீரோயினாக அறிமுகமான படத்தின் பெயர் ‘சந்திரலேகா’ என்பது நினைவுகூரத்தக்கது. இதில், விஜய் ஜோடியாக அவர் நடித்தார்.