

கோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. பிரகாஷ் ஜவடேகர், அமிதாப் பச்சன், ரஜினி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
கோவாவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். மத்திய அரசு நடத்தும் இந்த விழாவில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த படங்கள் திரையிடப்படும். இதில், இந்தியாவில் உருவாகும் படங்களும் திரையிடப்படும்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு, இது 50-வது வருடம். எனவே, இந்த வருடம் மிகப் பிரம்மாண்டமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இன்று (நவம்பர் 20) முதல் வருகிற 28-ம் தேதி வரை 9 நாட்களுக்கு இந்த விழா நடைபெறும்.
இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு, குத்து விளக்கேற்றினர். பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்வில், சங்கர் மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த விழாவில், அமிதாப் பச்சனுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்படுகிறது. மேலும், அவரைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்படுகின்றன. ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது ரஜினிக்கு வழங்கப்படுகிறது.
இந்த வருடம், 76 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்களும், இந்திய மொழிகளைச் சேர்ந்த 41 படங்களும் திரையிடப்படுகின்றன. இதில், பார்த்திபன் இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 2 தமிழ்ப் படங்கள் திரையிடப்படுகின்றன.
மேலும், பொன்விழா ஆண்டை முன்னிட்டு சிறந்த 12 படங்களின் வரிசையில் கே.பாலசந்தர் இயக்கிய ‘இரு கோடுகள்’ படம் திரையிடப்படுகிறது.