

மத்திய அரசு விருது பெறும் ரஜினிக்கு, வேலூரில் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர் எஸ்.தாணு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவா சர்வதேச திரைப்பட விழா, இன்று (நவம்பர் 20) தொடங்கி வருகிற 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இது 50-வது வருடம் என்பதால், விழா ஏற்பாடுகள் விமரிசையாக செய்யப்பட்டுள்ளன. பார்த்திபன் இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு’ மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ என 2 தமிழ்த் திரைப்படங்கள் இதில் திரையிடப்படுகின்றன.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கலந்துகொண்டு இந்த விழாவைத் தொடங்கி வைக்கிறார். இதில், ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ என்ற மத்திய அரசின் சிறப்பு விருது ரஜினிக்கு இன்று வழங்கப்பட இருக்கிறது. சினிமாவில் சிறப்பாகப் பங்காற்றியதால் இந்த விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
இந்த விருதைப் பெறுவதற்காக, நேற்று (நவம்பர் 19) கோவா சென்றுள்ளார் ரஜினி. அவர் திரும்பி வந்ததும், அவருக்காக வேலூரில் பிரம்மாண்டமான விழா நடத்தத் திட்டமிட்டு வருகிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இவர்தான் ரஜினிக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் கொடுத்தவர். ‘பைரவி’ படத்தின் வெளியீட்டாளரான இவர், அந்தப் படத்தின் விளம்பரங்களில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என முதன்முதலில் குறிப்பிட்டார். அத்துடன், ரஜினி நடிப்பில் ‘கபாலி’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
இந்த விழாவில் கலந்துகொள்ள திரைப் பிரபலங்கள் பலரையும் அழைக்கத் திட்டமிட்டுள்ளார் எஸ்.தாணு. குறிப்பாக, ‘கமல் 60’ நிகழ்ச்சிகளில் ரஜினி கலந்துகொண்டதோடு மட்டுமின்றி, கமல் - ரஜினி அரசியல் இணைப்பு பற்றியும் பேசப்பட்டு வருவதால், இதில் கமல்ஹாசன் கலந்துகொள்ள வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இயக்குநர் பாரதிராஜாவும் கலந்து கொள்கிறார்.
ரஜினி நடிப்பில் அடுத்ததாக ‘தர்பார்’ படம் ரிலீஸாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.