Published : 20 Nov 2019 12:14 PM
Last Updated : 20 Nov 2019 12:14 PM

கமல் - ரஜினி இணைந்தால், யார் முதல்வர் வேட்பாளர்? ஸ்ரீப்ரியா பதில்

கமலும் ரஜினியும் அரசியலில் இணைந்தால் யார் முதல்வர் வேட்பாளர்? என்ற கேள்விக்கு நடிகை ஸ்ரீப்ரியா பதில் அளித்துள்ளார்.

கமல் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், ‘கமல் 60’ என்ற தலைப்பில் ‘உங்கள் நான்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்வேறு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், “கமலுடன் ரஜினி இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது” என வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து பலரும் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ரஜினி - கமலிடம் தனித்தனியாகக் கேள்வி எழுப்பியபோது, ‘தேவையும் சூழ்நிலையும் ஏற்பட்டால் இணைவோம்’ என்று பதில் அளித்தனர்.

இந்நிலையில், இந்த இணைப்பு சாத்தியமா? என நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிரணியின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீப்ரியாவிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று கேள்வி எழுப்பியது.

ஸ்ரீப்ரியா

“மக்களுக்கு அவசியம் என்றால் இது நடந்தே தீரும். கண்டிப்பாக இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு, ஆட்சியில் இருப்பவர்கள் மக்களுக்கு மட்டும் சேவை செய்ய வேண்டும். ‘இவருக்கு என்ன தெரியும்? அவருக்கு என்ன தெரியும்?’ என அநாவசியமான விமர்சனங்களை வைக்கக்கூடாது. அவர்களும் பிறக்கும்போதே மேடையில் பேசிக்கொண்டு பிறக்கவில்லை. எனவே, விமர்சனங்களை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்வதற்கான வாய்ப்பு இது. அப்படிச் செய்யவில்லை என்றால் நிச்சயம் இரண்டு பெரிய சக்திகள் ஒன்று சேரத்தான் செய்யும்” என்றார் ஸ்ரீப்ரியா.

‘தேர்தலுக்கு முன்பே கூட்டணி என்ற கருத்தை இது உருவாக்குமா?’ என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “கட்சி தொடங்கிய ஒரு வருடத்துக்குள்ளேயே நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என அதில் நாங்கள் தெரிந்துகொண்டோம். மக்களும் எங்களைப் புரிந்து கொண்டனர். அதில் தனித்து நின்றதால், வரப்போகும் தேர்தல்களில் கூட்டணி கிடையாது என அர்த்தமில்லை. ஒருமித்தக் கருத்து உடையவர்கள் ஒன்று சேர்வோம்’ என எங்கள் தலைவர் கூறியிருக்கிறார். இவர்கள் இருவருமே நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும்போது, கண்டிப்பாக ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்” என்றார்.

‘அப்படி இணைந்தால், இருவரில் யார் முதல்வர் வேட்பாளர்?’ என செய்தியாளர் கேட்க, “என்னுடைய அபிப்ராயம் கமல் முதல்வராக வேண்டும் என்பது. அதற்காகத்தான் நான் வேலை செய்வேன். யாருடன் இணைந்து வேலைசெய்ய வேண்டுமென அவர் சொல்கிறாரோ, அவர்களுடன் வேலை செய்வோம்” எனப் பதில் அளித்தார் ஸ்ரீப்ரியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x