

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். இது அவருடைய 58-வது படமாகும். லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்றுகிறார்.
விக்ரம் ஜோடியாக ‘கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். விக்ரமுக்கு வில்லனாக இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு, அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு, கேரளாவில் நடைபெற்று வந்தது. பாடல் காட்சி ஒன்றை அங்கு படமாக்கினர். நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடியுடன் விக்ரம் தோற்றமளித்தார். விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டிக்கு இடையிலான காதல் பாடல்தான் அங்கு படமாக்கப்பட்டது.
இந்நிலையில், கேரளாவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு (2020) கோடை விடுமுறையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். எனவே, மூன்றாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்தப் படத்தில், 20 விதமான தோற்றங்களில் விக்ரம் தோன்றுகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.