பிரபல இயக்குநர் போல் மிமிக்ரி செய்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய்: ரத்னகுமார் நெகிழ்ச்சி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போல் மிமிக்ரி செய்து விஜய் பிறந்த நாள் வாழ்த்து கூறியதால், நெகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.
‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அமலாபால் நடிப்பில் ‘ஆடை’ படத்தை இயக்கினார். போஸ்டர் வெளியானது முதல் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
தற்போது லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘தளபதி 64’ படத்துக்கான திரைக்கதையை எழுதியுள்ளார் ரத்னகுமார். இதன் படப்பிடிப்பு புதுடெல்லியில் நடைபெற்று வருகிறது. கல்லூரிப் பேராசிரியராக விஜய் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இன்று (நவம்பர் 19) ரத்னகுமாருக்குப் பிறந்த நாள். லோகேஷ் கனகராஜ் செல்போனில் இருந்து, லோகேஷ் போலவே பேசி பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய். இதை நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ரத்னகுமார்.
“பயணம் செய்து, நிறைய மனிதர்களைச் சந்தித்து திரைக்கதை எழுதும் பணியில் இருப்பதால், இன்று என்னால் புதுடெல்லியில் இருக்க முடியவில்லை. ஆனால், இந்த அற்புதம் நிகழ்ந்தது. லோகேஷ் செல்போனில் இருந்து, லோகேஷ் குரல் போல மிமிக்ரி செய்து, ‘மச்சி... ஹேப்பி பர்த்டே டா’ என தளபதி எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். வாழ்க்கை வாழ்வதற்குத் தகுதியானதுதான். அனைவருக்கும் நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ரத்னகுமார்.
