

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் நிச்சயமாக தீபாவளிக்கு வெளிவரும் என்று தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்தார்.
'வீரம்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் தொடங்கப்பட்டது. இத்தாலியில் ஒரு பாடலைப் படமாக்கிவிட்டு திரும்பினார்கள். அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் சில காட்சிகளைப் படமாக்கினார்கள்.
இன்னும் நிறைய காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால், தீபாவளிக்கு இப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது. இச்செய்தி குறித்து தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்திடம் கேட்டபோது, "கொல்கத்தா படப்பிடிப்போடு 65% படப்பிடிப்பு முடிவுற்றது. படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும், அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.
இப்படத்தின் தலைப்பாக 'வெட்டி விலாஸ்', 'வெறித்தனம்' என பல்வேறு தலைப்புகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன. இதுவரை எந்த ஒரு தலைப்பையும் படக்குழு உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.