

’ஆதித்ய வர்மா’ படத்தில் நான் நடித்திருந்தாலும் நிஜத்தில் அதுபோல ஒரு காதலன் இருப்பதை விரும்பமாட்டேன் என்று படத்தின் நாயகி பனிடா சாந்து கூறியுள்ளார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான ’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ’ஆதித்ய வர்மா’. நடிகர் விக்ரம், தனது மகன் துருவ்வை இந்தப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்கிறார். ஆரம்பத்தில் ’வர்மா’ என்று பெயரிடப்பட்டு, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் படம் உருவானது. ஆனால் அது தயாரிப்பாளர் தரப்புக்குத் திருப்தி தரவில்லை என்பதால் அந்த மொத்தப் படமும் கிடப்பில் போடப்பட்டு துருவ், இசையமைப்பாளர் ராதனைத் தவிர மற்ற அனைத்து நடிகர்களும், இயக்குநரும் மாற்றப்பட்டனர்.
’அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாய்யா ’ஆதித்ய வர்மா’வின் இயக்குநரானார். முதலில் நாயகியாக நடித்த கொல்கத்தா நடிகை மேகாவுக்குப் பதிலாக, ’அக்டோபர்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பனிடா சாந்து என்பவர் நாயகியாக ஒப்பந்தமானார்.
இந்தப் படத்தின் காதலைப் போல நிஜத்தில் நடக்குமா என்ற கேள்விக்குப் பதில் சொன்ன நாயகி பனிடா சாந்து, "என்னால் பொதுவாகப் பேச முடியாது. ஆனால் இதுபோன்ற ஒரு காதல் என் வாழ்க்கையில் இருக்க நான் விரும்பவில்லை. ஆதித்ய வர்மா மோசமானவன், குறைகள் இருப்பவன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இதுபோன்ற காதல் நிஜத்திலும் இருக்கத்தான் செய்கிறது.
சினிமா என்பது இது போன்ற கதைகளைச் சொல்லத்தான். ஆனால் அதை வெறுமனே காட்டுவதற்கும், போற்றுவதற்கும் மெல்லிய வித்தியாசம் உள்ளது. நாங்கள் போற்றவில்லை என்று நம்புகிறேன். இதுவரை நான் பார்த்ததை வைத்துச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் சரியாகவே எடுத்திருக்கிறோம். நாயகனின் கோபத்தாலும், நடத்தையாலும் வரும் வலி, வேதனையைக் காட்டியிருக்கிறோமே தவிர, இதோ பாருங்கள், கோபமான இளைஞர் பைக் ஓட்டிச் செல்கிறான் என்பது போலக் காட்டவில்லை" என்று கூறியுள்ளார்.
ஆதித்ய வர்மா நவம்பர் 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.