

அருண் விஜய் நடித்துவரும் ‘சினம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
ஹீரோவாக அருண் விஜய் நடித்து கடைசியாக வெளியான படம் ‘தடம்’. மகிழ் திருமேனி இயக்கிய இந்தப் படம், கடந்த மார்ச் மாதம் ரிலீஸானது. அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘பாக்ஸர்’, ‘அக்னிச் சிறகுகள்’, ‘மாஃபியா’ ஆகிய படங்களில் நடித்தார் அருண் விஜய். இதில், ‘மாஃபியா’ படப்பிடிப்பு மட்டுமே முழுதாக நிறைவு பெற்றுள்ளது. மற்ற இரண்டு படங்களின் படப்பிடிப்பு தாமதமாக, ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கும் படத்தில் நடிக்கத் தொடங்கினார்.
‘சினம்’ என்று தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படத்தில், காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அருண் விஜய். அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வாணி நடிக்கிறார். ஷபீர் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
மூவிங் ஸ்லைட்ஸ் நிறுவனம் சார்பில் அருண் விஜய் தந்தை விஜயகுமாரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 19) அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ‘சினம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இந்தப் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.