

காமெடி நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்து வந்த ‘மண்டேலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’, ‘மாரி 2’ ஆகிய படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர், ‘ஓப்பன் விண்டோ’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை, கடந்த ஜூலை மாதம் தொடங்கினார். திரைப்படங்கள், குறும்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை இந்த நிறுவனம் மூலம் தயாரிக்கப் போவதாக அறிவித்தார்.
அதன்படி, ‘மண்டேலா’ என்ற படத்தை முதலில் தயாரிப்பதாக அறிவித்தார். ஓப்பன் விண்டோ நிறுவனத்துடன் இணைந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் மற்றும் விஸ்பெர்ரி ஃபிலிம்ஸ் ஆகியவை இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
யோகி பாபு பிரதான வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநரான மடோன் அஷ்வின் இயக்குகிறார். கடந்த ஜூலை 24-ம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு இந்தப் படத்தைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
இந்நிலையில், இன்றுடன் (நவம்பர் 19) படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பாலாஜி மோகன். இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து அடுத்த வருடம் (2020) 'மண்டேலா' ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை, பிலோமின்ராஜ் எடிட் செய்கிறார். பரத் சங்கர் இசையமைக்கிறார்.