

உனைப் பார்த்து எப்போதும் வியக்கிறேன் என நயன்தாராவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவுக்கு நேற்று (நவம்பர் 18) பிறந்த நாள். கடந்த சில வருடங்களாகத் தன் காதலர் விக்னேஷ் சிவனுடன், ஏதாவது ஒரு வெளிநாட்டில் பிறந்த நாளைக் கொண்டாடுவது அவர் வழக்கம்.
அதன்படி, இந்தப் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடியுள்ளார் நயன்தாரா. நியூயார்க், ப்ளோரிடா என சில மாகாணங்களில் இருவரும் மகிழ்ச்சியாகச் சுற்றி வருகின்றனர்.
இடையே, பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் அவருடைய மகள் குஷி கபூரையும் அங்கு சந்தித்துள்ளனர். இது எதேச்சையாக நடந்ததா அல்லது திட்டமிட்ட சந்திப்பா எனத் தெரியவில்லை.
இந்நிலையில், உனைப் பார்த்து எப்போதும் வியக்கிறேன் என நயன்தாராவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இன்ஸ்டாகிராமில் நயனுக்கான வாழ்த்தைப் பதிவிட்டுள்ள அவர், “எனது வாழ்வின் அன்பிற்கினிய உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் இருக்கவும்.
துணிச்சலாக, வலிமையானவராக, நெறிகளைப் பின்பற்றுபவராக, நேர்மையானவராக, கடின உழைப்பாளியாக, பக்தியுடைய நபராக, கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருக்கவும். வாழ்விலும் பணியிலும் மென்மேலும் சாதிக்க வாழ்த்துகள். வாழ்க்கையின் சிறப்பான தருணங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உனைப் பார்த்து எப்போதும் வியக்கிறேன்” என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக ‘தர்பார்’ படம் ரிலீஸாக இருக்கிறது. மேலும், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.