

‘சூரரைப் போற்று’ படத்தின் தீம் இசைக்காக ராப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் சூர்யா.
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி நடிக்க, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சூர்யா, குனீத் மோங்கா இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் ‘சூரரைப் போற்று’ படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் ராப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் சூர்யா. தீம் இசையில் இந்த ராப் இடம்பெறுகிறது. இத்தகவலை, ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘அஞ்சான்’ படத்தில் ‘ஏக் தோ தீன் சார்’ பாடலின் மூலம் பாடகரான சூர்யா, ‘பார்ட்டி’ படத்தில் கார்த்தியுடன் இணைந்து சில வரிகளைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தையும் அவரே தயாரிக்கிறார்.