

ரஜினியும் கமலும் அரசியலில் இணைந்தால் என்ன தவறு என்று நடிகர் பிரபு கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல் திரைக்கு வந்து 60-ம் ஆண்டை முன்னிட்டு, ‘உங்கள் நான்’ எனும் விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று (நவம்பர் 17) நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷங்கர், மணிரத்னம், கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த விழாவில் பேசியபோது, ‘ரஜினியும் கமலும் இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது’ என தனது ஆசையைக் குறிப்பிட்டார். இந்த விஷயம்தான் தற்போது விவாதப்பொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து நடிகர் பிரபு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ''ரஜினியும் கமலும் ரொம்ப நல்லவர்கள். தொடர்ந்து அன்பும் ஆதரவும் காட்டி வரும் மக்களுக்காக அவர்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதில் அண்ணன் கமல் தற்போது இறங்கியுள்ளார். அண்ணன் கமல் இறங்கியது பெரிய விஷயம். அதே மாதிரி அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினியும் இறங்கினால் மிக்க மகிழ்ச்சி. அதற்குப் பிறகு திரளும் கூட்டத்தையும் திரையுலகினரின் ஒத்துழைப்பையும் பார்க்கலாம்.
ரஜினி, கமலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கமல் அரசியலுக்கு வந்துவிட்டார், எப்போது ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நான் எங்கே போனாலும், மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். கருத்து வேறுபாடுகள் இருவருக்கும் இருக்கலாம். ஆனால், அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவர்கள் இருவரும் இணைய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவர்கள் இணைந்தால் நான் பெரிதாக வரவேற்பேன்'' என்றார்.