

கமலும் ரஜினியும் இணைந்து அரசியல் பணி செய்வார்களா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் சுஹாசினி மணிரத்னம்.
கமல் திரைக்கு வந்து 60-ம் ஆண்டை முன்னிட்டு, ‘உங்கள் நான்’ எனும் விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று (நவம்பர் 17) நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷங்கர், மணிரத்னம், கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த விழாவில் பேசியபோது, ‘ரஜினியும் கமலும் இணைந்து அரசியல் செய்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது’ என தனது ஆசையைக் குறிப்பிட்டார். இந்த விஷயம்தான் தற்போது விவாதப்பொருளாகி இருக்கிறது.
இதுகுறித்து கமலின் அண்ணனான சாருஹாசன் மகளும், நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.
அதில் அவர் பேசியதாவது:
“எங்கள் எல்லோர் மனதிலும் இருந்ததைத்தான் நேற்று எஸ்.ஏ.சந்திரசேகர் மேடையில் பேசினார். இந்த ஆசை எல்லோருக்குமே இருக்கிறது. முக்கியமாக, கமல் குடும்பத்தினர், ரஜினி குடும்பத்தினர் மற்றும் திரையுலகினரின் ஆசையாக இருக்கிறது. அவர்கள் இரண்டு பேரும் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பது பர்சனலாகவும் என்னுடைய ஆசை. ஆனால், இது நிறைவேறுமா எனத் தெரியவில்லை.
ஏனென்றால், என்னுடைய சித்தாத்தங்களுக்கு எதிராக இருப்பவர்களுடன், என்னால் ஒரு அறையில் 5 நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியாது. எழுந்து போய்விடுவேன். அதனால், ஆசைப்படுவது சுலபம். அதை நிஜமாக்குவது கஷ்டம். அதையும் மீறி அவர்கள் அதைச் செய்தால், தமிழ்நாட்டுக்கு நல்லது.
கமல் - ரஜினி இருவரின் குடும்பமும் ஒன்றாகப் பின்னிப்பிணைந்த குடும்பம்தான். கமல் நிகழ்ச்சிகளைவிட, ரஜினி குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு நானும், அப்பா - அம்மாவும் அதிகமாகச் சென்றிருக்கிறோம். அது எல்லோருக்கும் வியப்பாகத்தான் இருக்கும். எனவே, இருவரும் அரசியலில் இணைந்தார்கள் என்றால், அதைப்போல் ஒரு நல்ல விஷயம் கிடையாது.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என வீட்டில் உள்ளவர்கள் ஆசைப்படலாம். ஆனால், அவர்களுக்கென்று தனித்துவம் இருக்குமில்லையா? அதனால், அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதற்கு நாங்கள் தலைவணங்கியாக வேண்டும்.”
‘திரைத்துறையிலேயே இரு துருவங்களாக இருக்கும் கமல் - ரஜினி, அரசியலில் இணைந்து செயல்படுவது சாத்தியமா?’ என்ற நெறியாளர் கேள்விக்கு, “ஷாருக் கானும், ஆமிர் கானும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதில்லை. அதற்காக, அவர்கள் இருவரும் இரு துருவங்கள் என்று சொல்லிவிட முடியுமா? ரொம்ப சிம்பிள். அது கமர்ஷியல் லாஜிக். இரண்டு பலத்தை ஒரே இடத்தில் போடுவதைவிட, இரண்டு பக்கமாக இருந்தால் இன்னும் பலம் அதிகமாகும் என்பதற்காக எடுத்த முடிவு.
அதேசமயம், இரண்டு பேரும் ஒரே படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என முடிவு செய்தால், இருவரும் நடிக்கக்கூட வாய்ப்பு உள்ளது. அதை பாலசந்தர், பாரதிராஜா செய்தார்களே... எனவே, ‘இணைந்து நடிக்க வேண்டாம்’ என்பது தொழில் ரீதியாக அவர்கள் அப்போது எடுத்த முடிவு. ஏனென்றால், இருவருமே சூப்பர் ஸ்டார்ஸ். நேற்று எஸ்.ஏ.சி. பேசியதைக் கேட்டபோது, ‘நம் மனதுக்குள் இருப்பதை வெளிப்படையாகப் பேசுகிறாரே...’ என்றுதான் தோன்றியது” எனப் பதிலளித்தார்.
‘இந்த முயற்சியில் சவால்கள் அதிகமா? வாய்ப்புகள் அதிகமா?’ என்று நெறியாளர் கேட்க, “வாய்ப்புகள் அதிகமில்லை என்பதால்தான் ஆசைப்படுகிறோம். ஆசைப்படுகிறோம் என்றாலே, அதில் வாய்ப்புகள் குறைவு என்பது மாதிரிதான் உள்ளது. ‘அற்புதம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்’ என நேற்று ரஜினியே சொன்னார். இரண்டு பேரும் மனது வைத்தால் நிச்சயம் நடக்கும்.
எங்கள் குடும்பத்தில் தாத்தா காங்கிரஸிலும் அப்பா திராவிடர் கழகத்திலும் இருந்தவர்கள். இரண்டு பேரும் வேறு வேறு கட்சிக்காகப் பணியாற்றியதால், எங்கள் குடும்பத்தில் இரண்டு சித்தாந்தங்களையும் பார்த்தோம். எனவே, ரஜினிக்கு ஒரு சித்தாந்தம், கமலுக்கு ஒரு சித்தாந்தம் என்றாலும், இருவரையும் ஒன்றாகப் பார்க்க முடியும் என்றுதான் தோன்றுகிறது.
என் தாத்தா கோயிலுக்குப் போனார், பூஜை - தர்ப்பணம் எல்லாம் செய்தார். ஆனாலும், என் அப்பாவுடன் அவர் ஒன்றாகத்தானே இருந்தார். பாசம் என்பது இருவரையும் ஒன்றாகத்தானே வைத்தது. என் அப்பாவின் சித்தாந்தமும், கமலின் சித்தாந்தமும் வேறு வேறாக இருந்தாலும், கமல் தன் அப்பாவுக்காக சிலை வைத்திருக்கிறார்.
அதனால், சித்தாந்தங்கள் வேறு வேறாக இருந்தாலும், மனது வைத்தால் இருவரும் ஒன்றாகச் செயல்பட முடியும். 10 பேர் படையெடுத்துச் சென்று இரண்டு பேரிடமும் மூளைச்சலவை செய்ய முடியுமா? என்று பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு அவர்கள் இளகிய மனம் கொண்டவர்களா அல்லது உறுதியானவர்களா? எனத் தெரியவில்லை” என்றார்.
‘இதுகுறித்து கமல் - ரஜினியிடம் பேசினீர்களா?’ என நெறியாளர் கேட்டதற்கு, “எங்கள் குடும்பத்தில் எனக்கும் என் அப்பாவுக்கும் இருவரும் இணையும் ஆசை இருந்தது. ஆனால், என் கணவர் மணிரத்னத்திடம் இதுபற்றிப் பேசியதில்லை. அவரிடமே இதுபற்றிப் பேசாதபோது, கமல் - ரஜினியிடம் எப்படிப் பேசுவது? அவரவர்களுக்கு என்று மனது இருக்கிறது. எதுவாக இருந்தாலும், இருவரும் இணைந்தால் நேர்மறை விஷயம்தானே... தமிழ்நாட்டில் அதைத்தானே எதிர்பார்க்கிறோம்” எனப் பதிலளித்தார் சுஹாசினி மணிரத்னம்.