

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஃபியா' படத்தில் ஆச்சரியங்களை எதிர்பாருங்கள் என்று அருண் விஜய் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரேகட்டமாக முடிக்கப்பட்டது.
சரியாகத் திட்டமிட்டு படப்பிடிப்பை முடித்ததிற்கு, படக்குழுவினர் அனைவருமே இயக்குநர் கார்த்திக் நரேனுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஏனென்றால், படப்பிடிப்பு சமயத்தில் அவருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. அதையும் பொருட்படுத்தாது, படப்பிடிப்பை முடித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 'மாஃபியா' படத்தின் டீஸருக்கும் இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், படத்தையும் டிசம்பரில் வெளியிட இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறது படக்குழு.
இந்நிலையில் 'மாஃபியா' படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் அருண் விஜய். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "'மாஃபியா' டப்பிங் முடிந்துவிட்டது. இதுவரை வெளியானதில் என் சிறந்த படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
நீங்கள் அனைவரும் இதைப் பார்க்கக் காத்திருக்கிறேன். ஆச்சரியங்களை எதிர்பாருங்கள். மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். இதற்காக சகோதரர் கார்த்திக் நரேனுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார் அருண் விஜய். தற்போது நவீன் இயக்கத்தில் உருவாகும் 'அக்னிச் சிறகுகள்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.