செப்டம்பர் 18ம் தேதி தொடங்குகிறது ரஜினி - ரஞ்சித் படப்பிடிப்பு
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 18ம் தேதி மலேசியாவில் தொடங்க இருக்கிறது.
'லிங்கா' படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ரஜினி. அப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு இப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருந்தது. ஆனால், நடிகர் - நடிகைகள் ஒப்பந்தம் மற்றும் மலேசிய அரசின் விசா விவகாரங்கள் தொடர்பாக படப்பிடிப்பு தாமதமானது.
தற்போது செப்டம்பர் 18ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்க இருக்கிறது. இதில் கலந்து கொள்ள செப்டம்பர் 17ம் தேதி சென்னையில் இருந்து கிளம்புகிறார் ரஜினி.
இப்படத்தில் ரஜினிக்கு நாயகியாக நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரகாஷ்ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் இப்படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரஜினிக்கு மகளாக நடிக்க முன்னணி நடிகைகள் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். விரைவில் முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தமாவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
