Published : 18 Nov 2019 08:08 am

Updated : 18 Nov 2019 10:14 am

 

Published : 18 Nov 2019 08:08 AM
Last Updated : 18 Nov 2019 10:14 AM

தமிழக முதல்வராவோம் எனக் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி: ரஜினி பேச்சு

rajini-speech-at-kamal-60-function

தமிழக முதல்வராவோம் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி என்று 'கமல் 60' நிகழ்ச்சியில் ரஜினி பேசினார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நவம்பர் 7-ம் தேதி தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பரமக்குடியில் தந்தை சீனிவாசனின் சிலை திறப்பு, தனது புதிய அலுவலகத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தரின் சிலை திறப்பு விழா ஆகியவை நடைபெற்றன. அன்றைய தினம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்ளவில்லை.


இதனிடையே, திரையுலகிற்கு கமல் வந்து 60 ஆண்டுகள் ஆனதையொட்டி ’கமல் 60’ என்ற தலைப்பில் 'உங்கள் நான்' என்ற நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 17) நடைபெற்றது. இதற்காக தமிழ் திரையுலகினர் பலரும் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் ரஜினி, இயக்குநர் ஷங்கர், இயக்குநர் மணிரத்னம், விஜய் சேதுபதி, கார்த்தி, வடிவேலு, ஜெயம் ரவி, தமன்னா, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மனிஷா கொய்ராலா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் சேரன், இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை மேடையில் வழங்கினார். மேலும், இந்த விழாவில் இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரஜினி பேசும் போது, "என் அருமை நண்பரும் கலையுலக அண்ணனுமான கமலுக்கு என் வாழ்த்துகள். இந்த உலகத்திலேயே நடிப்பு, எழுத்து, பாடல்கள் எழுதுவது, பாடுவது, 10 கதாபாத்திரங்களில் ஒரே படத்தில் நடிப்பது, 60 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகத்தில் ஒரு சாம்ராஜ்ஜியத்தையே நடத்துவது என எல்லாவற்றையும் செய்து காட்டிய ஒரே நபர் கமல்தான். அதனால்தான் அவர் உலக நாயகன்.

இந்தியாவில் கமல்ஹாசனைப் போல திரைத்துறையில் பன்முக திறமையை வெளிக்காட்டவே முடியாது. 60 ஆண்டுக் கலை பயணம் என்பது சாதாரண விஷயமல்ல. அதற்காக அவர் செய்த தியாகங்கள் ஏராளம். நானும் பஸ் கண்டக்டர் தொடங்கி நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை விட முடி வெட்டுவது தொடங்கி கமல் பட்ட கஷ்டங்கள் அதிகம்.

'களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் நடிப்பைப் பார்த்திருக்கிறேன். அந்த பையன் என்னமா நடிக்கிறான் என்று என்னிடம் பலர் சொல்ல, ‘டூரிங் டாக்கீஸ்’ சென்று பார்த்தேன். திரையில் பார்த்த குழந்தையுடன், தரையில் அமர்ந்து பார்த்த குழந்தை முதல் படத்தில் நடித்தது. அதுவொரு அற்புதம். மேலும், அவருடன் 43 ஆண்டுகள் திரையுலக பயணத்தில் இருப்பது அதிசயம்.

2 ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அவர் முதல்வரானவுடன் ஆட்சி 20 நாட்கள் கூட தாங்காது. 1 மாதம் தாங்காது. 5 மாதம் தான் கவிழ்ந்துவிடும் என்று 99% பேர் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. எல்லா தடைகளையும் தாண்டி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்று அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம், அற்புதம் நடக்கிறது. நாளைக்கும் அதிசயம், அற்புதம் நடக்கும்.

கமல்ஹாசன் நடிப்பைப் பார்த்து நான் என்ன சொல்வது. அவருடன் நடிக்கும் போது சந்தோஷம் அடைந்திருக்கிறேன், வியந்து பார்த்துப் பிரமித்திருக்கிறேன். பல நேரங்களில் பொறாமை கூடப் பட்டிருக்கிறேன். ஒரு முறை அவர் ஒரு காட்சியில் நடித்த போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனே, ஒரு துணியை எடுத்துக் காயத்தைக் கட்டி 10 நிமிடங்களில் நடிக்க வந்துவிட்டார். அவர் ஒரு மகா கலைஞன், நடமாடும் பல்கலைக்கழகம். ஏதாவது ஒரு புது விஷயம் வந்துவிட்டால், உடனே ஆராய்ந்துவிடுவார்.

அப்படி ஆராய்ந்த விஷயத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என நினைப்பார். அவரது பேச்சு புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், அவ்வாறு நடிப்பவர்களை என்னச் சொல்வது?. இந்த ரஜினிக்கே புரியும்போது எல்லாருக்கும் புரியும். தெரியாதவர்கள் போல் நடிப்பவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. கமல் ஒரு மிகப்பெரிய ஜீனியஸ். அவர் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என நினைக்கிறாரோ, அதையெல்லாம் மக்களுக்கு தன் சினிமாக்கள் மூலமாக கற்றுக் கொடுக்கிறார்.

எங்களுடைய நட்பை யாராலும் பிரிக்க முடியாது. கருத்துகள் மாறலாம், நட்பு மாறாது. கமலுக்கும், எனக்குமான நட்பு உயிரோட்டமானது. அதை யாராலும் உடைக்க முடியாது. நாங்கள் இருவருமே எங்களின் வளர்ச்சிக்காக எங்களின் ரசிகர்களைப் பயன்படுத்திக் கொண்டதில்லை. படங்களுக்காகக் கொள்கைகளை மாற்றிக்கொண்டது இல்லை. அவர் நீண்ட நாள் வாழ வேண்டும். இந்த நட்பை ரசிகர்களும் காப்பாற்ற வேண்டும். அன்பை விதையுங்கள். எங்கள் இருவருக்கும் வேறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அரசியலுக்கு வந்தால், எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டோம்" என்று பேசினார் ரஜினி.

கமல் 60 நிகழ்ச்சிஉங்கள் நான் நிகழ்ச்சிகமல் பேச்சுகமல் நிகழ்ச்சிரஜினி பரபரப்பு பேச்சுரஜினி பேச்சுரஜினி பேட்டி

You May Like

More From This Category

More From this Author