

ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிவடைந்துள்ளது.
சந்தானம் நடிப்பில் வெளியான 'ஏ1' படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படமும் ஒன்று. இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது.
மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் கண்ணனே தயாரித்து வரும் இந்தப் படத்தின் கதைக்களத்துக்காகச் சிலம்பம் கற்றுக் கொண்டுள்ளார் சந்தானம். இதில் அவருக்கு நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா ஆகியோர் நடித்து வந்தார்கள். முக்கியக் கதாபாத்திரத்தில் பழம்பெரும் நாயகி செளகார் ஜானகி நடித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. ஒரே கட்டமாக சந்தானம் தேதிகள் கொடுத்ததால், ஆர்.கண்ணனும் அந்தத் தேதிகளைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டார். இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே படமாக்க வேண்டியதுள்ளது.
அதுமட்டுமன்றி, இந்தப் படத்தில் 30 நிமிட காட்சிகள் 1980-களில் நடைபெறுவது போன்று வடிவமைத்திருந்தார் இயக்குநர் ஆர்.கண்ணன். இந்தக் காட்சிகளை ஹைதராபாத்தில் 80 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரங்கில் படமாக்கியுள்ளது படக்குழு.
2020-ம் ஆண்டு பிப்ரவரில் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. விரைவில் படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர்.