

சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள 'இருட்டு' திரைப்படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வி.இசட்.துரை இயக்கத்தில் சுந்தர்.சி, தன்ஷிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'இருட்டு'. இதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, சரியான வெளியீட்டுத் தேதிக்காகக் காத்திருந்தது.
இந்தப் படத்தின் வெளியீடு உரிமையைக் கைப்பற்றியுள்ள ஸ்கிரீன் சீன் நிறுவனம் அக்டோபர் 11-ம் தேதி 'இருட்டு’ வெளியாகும் என்றது. ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து 'பிகில்' வெளியீட்டில் கவனம் செலுத்தத் தொடங்கியது ஸ்கிரீன் சீன் நிறுவனம். தற்போது 'பிகில்' படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் 'இருட்டு' வெளியீட்டை உறுதி செய்துள்ளது.
டிசம்பர் 6-ம் தேதி 'இருட்டு' வெளியாகும் என அறிவித்துள்ளது. முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள 'ஆக்ஷன்' நவம்பர் 15-ம் தேதி வெளியாகியுள்ளது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.