உதயநிதியைப் பற்றிய ஃபேஸ்புக் பதிவு சர்ச்சை: ஸ்ரீரெட்டி விளக்கம்

உதயநிதியைப் பற்றிய ஃபேஸ்புக் பதிவு சர்ச்சை: ஸ்ரீரெட்டி விளக்கம்
Updated on
1 min read

உதயநிதியைப் பற்றிய ஃபேஸ்புக் பதிவு சர்ச்சைக்கு ஸ்ரீரெட்டி பத்திரிகையாளர்கள் மத்தியில் விளக்கமளித்தார்.

தெலுங்கு திரையுலகில் படவாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை உருவாக்கியவர் ஸ்ரீரெட்டி. அதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் விஷால், லாரன்ஸ் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் இங்கும் பெரும் சர்ச்சை உருவானது.

தற்போது சென்னையிலேயே தங்கி, சில படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. அவ்வப்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, உதயநிதியைப் பற்றி இவர் வெளியிட்ட பதிவு என்று, அவரது ஃபேஸ்புக் பதிவு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதனால், அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பு உண்டானது.

இது தொடர்பாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ஸ்ரீரெட்டி. அப்போது, "ஹைதரபாத்தை விட சென்னையில் ரொம்ப நிம்மதியாக இருக்கிறேன். தமிழக மக்கள் பெண்களுக்கு நல்ல மரியாதை கொடுக்கிறார்கள். என் வாழ்க்கையில் ரொம்ப ஊன்று கோலாக இருந்தவர் மறைந்த ஜெயலலிதா அவர்கள். சினிமாவிலும், அரசியலிலும் இரும்பு பெண்மணியாக இருந்தார். இந்தியளவில் புகழ் பெற்றார். அவரை கோபுரத்தில் வைத்து தமிழக மக்கள் அழகு பார்த்தார்கள். அதனால் தான் நான் சென்னைக்கே வந்தேன்.

சினிமாத் துறையில் மறைந்த கருணாநிதி அவர்கள் செய்த சாதனைகள் ஏராளம். அவரது படங்கள் இன்றைக்கும் பொக்கிஷமாக இருக்கிறது. அவர் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்து பலமுறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி அவர்கள். அவரது மகனும் தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் மீதும் பெரிய மரியாதை உண்டு.

அடுத்து உதயநிதி ஸ்டாலினைப் பற்றித் தான் பேச வந்தேன். சமீபமாக அவர் என்னை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தினார் என்று எனது போலி ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியிட்டார்கள். முதலில் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். இது உண்மையா என்று என்னிடம் பலரும் கேட்கிறார்கள். எனது பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளில் பல்வேறு போலிக் கணக்குகள் இருக்கின்றன. அப்படிப்படி ஒரு கணக்கிலிருந்து உதயநிதியைப் பற்றிய போஸ்ட் வெளியாகியுள்ளது.

அந்த போஸ்ட்டில் உள்ள தகவல்கள் தவறானது. நான் உதயநிதியை சந்தித்ததே இல்லை. என் பெயரில் போலிக் கணக்குகளிலிருந்து வரும் தகவல்களை நம்பாதீர்கள். அப்படி வரும் செய்திகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. என்னை வைத்து விளையாட நினைக்கிறார்கள்.

கருணாநிதி அவர்களது குடும்பத்தினர் மீதும், திமுக மீதும் எனக்குப் பெரிய மரியாதை இருக்கிறது. என்னை வைத்து அவர்களுக்குக் கெட்ட பெயரை உருவாக்க நினைக்கிறார்கள். நான் திமுக, அதிமுக இரண்டு கட்சியையும் ஆதரிக்கிறேன். எனக்கு அரசியல் ரீதியாக எதிரிகள் வேண்டாம். திமுகவினரைக் காப்பாற்ற இப்படிப் பேசவில்லை." என்று தெரிவித்தார் ஸ்ரீரெட்டி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in