

'தகராறு' இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் படத்தில் ஷாம்லி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அருள்நிதி, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிக்க கணேஷ் விநாயக் இயக்கத்தில் வெளியான படம் 'தகராறு'. தயாநிதி அழகிரி தயாரிப்பில் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றது.
'தகராறு' படத்தைத் தொடர்ந்து தற்போது கணேஷ் விநாயக், விக்ரம் பிரபு நடிக்கவிருக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்துக்கு 'வீர சிவாஜி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். இறுதியாக ஷாம்லி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக 'அஞ்சலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷாம்லி. அஜித்தின் மனைவியான ஷாலினியின் தங்கை ஷாம்லி என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னரே ஷாம்லி தெலுங்கில் ஒரு படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். தமிழில் ஷாம்லி நாயகியாக அறிமுகமாகும் முதல் படம் 'வீர சிவாஜி' என்பது குறிப்பிடத்தக்கது.