

கொரியன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாராவும், இந்தி ரீமேக்கில் சோனம் கபூரும் நடிக்கின்றனர்.
2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படம் ‘ப்ளைண்ட்’. இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். காவல்துறை இந்த வழக்குகளுக்குச் சாட்சி இருக்கிறதா என்று தேடுகிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சூ-ஹா என்பவர் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் ஒரு விபத்தில் தன் கண்பார்வையை இழந்தவர் சூ ஹா.
ஒரு கார் விபத்து வழக்கு பற்றிய முக்கியமான ஆதாரத்தை அவர் தருகிறார். சூ ஹா-வின் மற்ற புலன்கள் அவருக்குக் கை கொடுக்கின்றன. திடீரென இன்னொரு சாட்சி, கி-சியாப் காவல்நிலையத்துக்கு வருகிறார். இவர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்.
இவர் சொல்வதும், சூ ஹா சொல்வது முற்றிலும் வெவ்வேறு விதமான சாட்சியாக இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
க்ரைம் த்ரில்லரான இந்தப் படம், தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் மிலிந்த் ராவ் இயக்க, நயன்தாரா பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘நெற்றிக்கண்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். கடந்த செப்டம்பர் 16-ம் தேதி இதன் ஷூட்டிங் தொடங்கியது.
இந்நிலையில், இந்தியிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்படுகிறது. பிரதான பாத்திரத்தில் சோனம் கபூர் நடிக்கிறார். ஷோமி மகிஜா இந்தப் படத்தை இயக்குகிறார்.