

உண்மையிலேயே ‘வீரம்’ தோல்விப் படமா? என்ற கேள்விக்கு, தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் பதில் அளித்துள்ளது.
அஜித் நடிப்பில் 2014-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ரிலீஸான படம் ‘வீரம்’. சிவா இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக தமன்னா நடித்தார். சந்தானம், விதார்த், பாலா, நாசர், தம்பி ராமையா, அப்புக்குட்டி என ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
வெற்றி ஒளிப்பதிவு செய்ய, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். ஆக்ஷன் படமான இது, ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. 45 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 130 கோடி ரூபாய் வசூல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுதான் அஜித் - சிவா கூட்டணியில் உருவான முதல் படம். இந்தப் படம் வெற்றி அடைந்ததால்தான், அடுத்தடுத்து சிவா இயக்கத்தில் நடித்தார் அஜித். அதேசமயம், ‘வீரம்’ படம் தோல்வி என்ற பொய்யான தகவலும் அஜித்தின் எதிர்த்தரப்பினரால் பரப்பப்பட்டது. இதனால், அஜித் ரசிகர்கள் மன வருத்தப்படுகின்றனர்.
இந்நிலையில், படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்ஷனிடம் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார் ஒரு அஜித் ரசிகர். அதில், “வீரம் படத்தில் 40 லட்ச ரூபாய் நஷ்டம் என்று வெளியாகும் செய்திகள் சரியா? இந்தப் பொய்., நரகத்தைப் போல இருக்கிறது. தயவுசெய்து தெளிவான விளக்கம் கொடுங்கள்” எனக் கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம், “எல்லாக் கதைகளுக்கும் 3 பக்கங்கள் உள்ளன. உங்கள் பக்கம், என் பக்கம் மற்றும் உண்மை” எனத் தெரிவித்துள்ளது.
விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘சங்கத்தமிழன்’ இன்று ரிலீஸாகியுள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை, விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இதனால் விஜயா புரொடக்ஷன்ஸ் ட்ரெண்டானத்தைத் தொடர்ந்து தற்போது இந்தக் கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.