சினிமா தயாரிப்பை சீரமைக்க சரத்குமாரின் 7 அம்சங்கள்

சினிமா தயாரிப்பை சீரமைக்க சரத்குமாரின் 7 அம்சங்கள்
Updated on
2 min read

படத் தயாரிப்பு முறையை மாற்றி சீரமைப்பது தொடர்பாக, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் 7 அம்சங்களை குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் அவ்வப்போது, திரையுலகில் நிலவி வரும் மாற்றங்கள் குறித்து ஃபேஸ்புக் தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்து வந்தார். தற்போது படத் தயாரிப்பில் நிலவி வரும் முறையை மாற்ற வேண்டும் என தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பது:

"திரையுலகில் நான் 33 வருடங்களுக்கு மேலாக இருக்கிறேன். 133 படங்களில் நடித்துள்ளேன். இதில் பெரும்பாலனவை தமிழ் படங்கள். நான் அறிமுகமானபோது இருந்த சூழலும், இன்றைய சூழலும் மொத்தமாக மாறியுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக நிறைய வளர்ந்துள்ளோம்.

இந்தத் துறையில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நம்மால் ஈடுகொடுக்க முடிகிறது என்பதை பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். இந்த மாறுதல்களால் வேறுபட்ட பார்வைகள், ரசனைகள் கொண்ட பலர் தற்போது இந்தத் துறையில் உள்ளனர்.

இந்த மாறுதல்களால் முன்னைவிட இந்தத் துறை ஆரோக்கியமாக உள்ளதா? இந்த கேள்வி தான் தற்போது திரையுலகின் முன் இருக்கிறது. திரைப்படத்தைச் சேர்ந்த கலைஞர்கள், ஃபைனான்சியர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களை விட, படத் தயாரிப்பாளர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. எவ்வளவு திட்டமிட்டாலும் தயாரிப்பாளர்களே நஷ்டத்தை சந்திப்பவர்களாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில், திரையுலகைச் சேர்ந்த அனைவரும் உட்கார்ந்து, படத் தயாரிப்பு முறையை மாற்ற வேண்டும். இந்த கட்டமைப்பை தற்போதைய சூழலுக்கு ஏற்றார்போல் மாற்ற வேண்டும். இதற்கான காரணங்கள் தெளிவாக உள்ளன:

1. தயாரிப்பாளர்கள் அதிக வட்டிக்கு வாங்கும் பணத்தை ஃபைனான்சியர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டும். ஏனென்றால் எந்த வங்கியும் திரைப்பட தயாரிப்புக்கு கடன் வழங்குவதில்லை. இதனால் ஃபைனான்சியர்களுக்கு எந்த சிக்கலும் வருவதில்லை. தாங்கள் முதலீடு செய்த பணத்தின் மூலம் வருமானம் பெறுகின்றனர்.

2. படம் சம்பந்தபட்ட அனைவருக்குமான பணத்தை பைசல் செய்யவில்லை என்றால் படம் வெளியாகாது. சாட்டிலைட் உரிமை வாங்கப்படவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு இது பெரிய நிதிச்சுமையாக மாறுகிறது. 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல அவுட் ரைட் முறையில் இப்போது திரைப்படம் வாங்கப்படுவதில்லை. இதுவும் ஒரு காரணம்.

3. படத்தை விநியோகிக்கும் விநியோகஸ்தர்களுக்கும் எந்த சிக்கலும் வருவதில்லை. அந்த லாப நஷ்டமும் தயாரிப்பாளரையே சேரும்.

4. படம் விற்கப்படுகிறதோ இல்லையோ, அனைத்து நிதிச் சுமையையும் தயாரிப்பாளர் ஏற்க வேண்டும். எல்லா தரப்புக்கும் பணத்தை தந்த பின்னரே படத்தை வெளியிட வேண்டும்.

5. இதில் எந்த நிலையிலும் தயாரிப்பாளரைத் தவிர மற்ற அனைவருக்கும் லாபமே. தொடர்ந்து நஷ்டமடையும் பட்சத்தில் நாட்டிலுள்ள சில விவசாயிகளின் கதிதான் தயாரிப்பாளர்களுக்கும் நேருகிறது

6. இந்த பிரச்சினையை தீர்ப்பது எப்படி? தயாரிப்பாளர்களே அனைத்து சிக்கலையும் சந்திக்காமல் இருப்பது எப்படி?

7. இதற்கான தீர்வு மிகவும் எளிது. தயாரிப்பு செலவை 50 சதவீதமாவது குறைக்க வேண்டும்.

இந்த கவர்ச்சிகரமான துறையின் இயல்பை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். சொல்கிறேன். தயாரிப்பு செலவை குறைப்பதை விட மற்ற தீர்வுகளும் உள்ளன” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in