

'வலிமை' படத்தில் அஜித்துடன் வடிவேலு நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்கு, படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
’நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ளார். போனி கபூர் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'வலிமை' எனப் பெயரிடப்படுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மற்றும் படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு ஆகியவை நடைபெற்று வருகின்றன. இதனிடையே இப்படத்தில் நடிப்பதாக வடிவேலு, அருண் விஜய், எஸ்.ஜே.சூர்யா எனப் பலரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், 'வலிமை' படப்பிடிப்பு எப்போது என்பதே இன்னும் முடிவாகாத நிலையில், நடிகர்களின் பெயர்கள் வெளியாகி இணையத்தில் விவாதப் பொருளாக உருவாகியுள்ளது.
அஜித்துடன் நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் வடிவேலு பெயர் இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனென்றால், அஜித் - வடிவேலு கூட்டணி இணைந்து கடைசியாக நடித்த படம் 'ராஜா'. அந்தப் படத்தின் போது இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால், அதற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை. இந்தப் படம் 2002-ம் ஆண்டு வெளியானது.
தற்போது அஜித் - வடிவேலு மீண்டும் இணையவுள்ளது தொடர்பாக விசாரித்தபோது, கண்டிப்பாக இது நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிவித்தார்கள். மேலும், ஹெச்.வினோத் எப்போதுமே தன் படங்களில் வித்தியாசமான கூட்டணியை நடிக்க வைப்பார். அது தான் அவருடைய மிகப்பெரிய ப்ளஸ். அதே போல் 'வலிமை' நடிகர்கள் கூட்டணி அறிவிக்கப்படும்போது கண்டிப்பாகப் பேசப்படும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தனர்.