

சென்னை
மாயமானதாக கூறப்பட்ட பிரபல பாடகி சுசித்ரா, ஓட்டலில் தங்கி இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். ஓய்வெடுக்க வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமாகி, பின்னணி பாடகியானவர் சுசித்ரா. இந்நிலையில், கடந்த 11-ம் தேதி முதல் இவரை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருமாறும் சென்னை அடையாறு காவல் நிலையத்தில் இவரது தங்கை சுஜிதா ஒரு புகார் கொடுத்தார். சுசித்ராவின் செல்போன் எண்ணையும் போலீஸாரிடம் கொடுத்தார்.
இதுகுறித்து அடையாறு துணை ஆணையர் பகலவன் மேற்பார்வையில் அடையாறு போலீஸார் விசாரணை நடத்தினர். சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன், அவரது செல்போனின் இருப்பிடம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், ஆழ்வார்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கி இருப்பது தெரிய வந்தது.
போலீஸார் அங்கு விரைந்து சென்று, அவரிடம் விசாரணை நடத்தினர். ஓய்வெடுக்கவே ஓட்டலுக்கு வந்துள்ளதாக போலீஸாரிடம் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, வழக்கு முடித்துவைக்கப்பட்டது.