

வெப் சீரிஸ் பணிகளை முடித்துவிட்டு, சூரி நடிக்கும் படத்தை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.
தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. தாணு தயாரித்த இந்தப் படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், தனுஷ் நடித்த படங்களின் வசூல் பட்டியலில் 100 கோடி ரூபாயைத் தாண்டிய முதல் படம் என்ற பெருமையையும் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க அணுகினார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், 'அசுரன்' வெளியீட்டுக்கு முன்பாகவே சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகிவிட்டார் வெற்றிமாறன்.
தற்போது சூரி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. ஆர்.எஸ்.இன்போடையின்மண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாக நெட் ஃபிளிக்ஸுக்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். ஆந்தாலஜி பாணியில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸை 4 இயக்குநர்கள் ஒவ்வொரு கதையாக இயக்குகிறார்கள். வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், மிஷ்கின், சுதா கொங்காரா ஆகியோர் இயக்குவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் விக்னேஷ் சிவன் இயக்கிய கதையில் அஞ்சலி, கல்கி கோச்சிலின் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வெற்றிமாறன் கதையின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ் மற்றும் சாய் பல்லவி நடிக்கவுள்ளனர். இதன் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு சூரி நாயகனாக நடிக்கும் படத்தைத் தொடங்கவுள்ளார் வெற்றிமாறன்.