

வி.ராம்ஜி
74-ம் ஆண்டில், தீபாவளியையொட்டி எம்ஜிஆர், சிவாஜி படங்களுடன் கே.பாலசந்தரின் படமும் வந்தது. இந்த மூன்று படங்களுக்குமே எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
74ம் ஆண்டில், தீபாவளியை முன்னிட்டு எம்.ஜி.ஆர். நடித்த ‘உரிமைக்குரல்’ வெளியானது. இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் லதா, நம்பியார் உட்பட பலரும் நடித்திருந்தார்கள். வண்ணப்படமாக வந்த இந்தப் படம்... மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதற்குக் காரணம் உண்டு. எம்ஜிஆரும் ஸ்ரீதரும் ஏற்கெனவே இணைவதாக இருந்து, அந்தப் படம் ஆரம்பித்த வேகத்திலேயே நின்றுவிட்டது. ‘அன்று சிந்திய ரத்தம்’ என்று அப்போது டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. விளம்பரத்தைப் பார்த்துவிட்டு எம்ஜிஆர் ரசிகர்கள் ஆர்வமானார்கள். ஆனால் படம் டிராப் என்றானதும் கொந்தளித்தார்கள்.
இதையடுத்து அப்போது வந்த ஸ்ரீதரின் படத்துக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று பரவலாகப் பேசப்பட்டது.
இத்தனை நீண்ட நெடிய எதிர்பார்ப்புக்கு மத்தியில்தான் ‘உரிமைக்குரல்’ படம் வெளியானது. அப்போது கொஞ்சம் சிரமத்தில் இருந்த ஸ்ரீதருக்கு, எம்ஜிஆர் செய்த உதவி இது. ‘உரிமைக்குரல்’ படமும் பாடல்களும் எகிடுதகிடாக ஹிட்டடித்தன.
74-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி வெளியானது ‘உரிமைக்குரல்’. எம்ஜிஆர் - லதா ஜோடி, பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட ஜோடியானது. எம்ஜிஆருக்கு ஜேசுதாஸ் பாடிய ‘விழியே கதை எழுது’ பாடல், மனதை மயக்கியது.
இதேவருடத்தில் நவம்பர் 13-ம் தேதி முக்தா சீனிவாசன் இயக்கத்தில், சிவாஜி நடித்த ‘அன்பைத்தேடி’ வெளியானது. முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் சிவாஜி, ஜெயலலிதா, விஜயகுமாரி, மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீகாந்த், சோ, மனோரமா, சிஐடி சகுந்தலா உட்பட பலர் நடித்தனர்.
முக்தா சீனிவாசனுக்கும் சிவாஜிக்கும் அப்படியொரு பிணைப்பு உண்டு. முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தில், நிறைய படங்களில் சிவாஜி நடித்திருக்கிறார். அந்த வகையில் சிவாஜியும் ஜெயலலிதாவும் ‘அன்பைத்தேடி’ படத்தில் நடித்தார்கள்.
சிவாஜிக்கு அடிக்கடி கனவு வரும். அதாவது விழித்துக் கொண்டிருக்கும் போதே கனவு வரும். இதனால் பொருள் இழப்பு, தீவிபத்து என்றாகும். இதைவைத்துக்கொண்டு கதை பண்ணியிருப்பார் முக்தா சீனிவாசன் . காமெடியாவும் செண்டிமெண்டாகவும் நகர்ந்த கதை, சிவாஜியின் யதார்த்தமான நடிப்பால் மிளிர்ந்தது. சோவின் காமெடியும் கைகொடுத்தது.
இதிலொரு சுவாரஸ்யம்... எத்தனையோ படங்களில் சிவாஜிக்கு தங்கையாக நடித்த விஜயகுமாரி, இதில் சிவாஜிக்கு அக்காவாக நடித்திருந்தார். படத்துக்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். ‘புத்தி கெட்ட பொண்ணுக்கு’, ‘சித்திர மண்டபத்தில்’, ‘அம்மாவும் அப்பாவும் வெள்ளைப்பூனைகள்’, ‘சிப்பிக்குள் இருந்தாலும் முத்து அது சிப்பிக்குச் சொந்தமில்லை’ என்ற பாடல்கள் எல்லாமே ஹிட்டடித்தன.
இதே வருடத்தில், நவம்பர் 13-ம் தேதியன்று, கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ வெளியானது. சுஜாதா, ஜெய்கணேஷ், கமல், விஜயகுமார், ஸ்ரீப்ரியா, படாபட் ஜெயலட்சுமி முதலானோர் நடித்திருந்தனர். மிடில் கிளாஸ் குடும்பத்தைக் கதைக் களமாக எடுத்துக் கொண்டு, அந்தக் குடும்பத்தைத் தாங்கும் பெண்ணாக, சுஜாதா நடிப்பில் வெளுத்துக் கட்டியிருந்தார்.
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது ‘அவள் ஒரு தொடர்கதை’. எம்ஜிஆரின் ‘உரிமைக்குரல்’ பி அண்ட் சி செண்டர்களில், வெற்றி பெற்றது என்றால், ‘அவள் ஒரு தொடர்கதை’ ஏ அண்ட் பி செண்டரில் ஹவுஸ்புல்லாக ஓடியது.
இந்தப் படத்துக்கும் எம்.எஸ்.வி.தான் இசை. எல்லாப் பாடல்களுமே ஹிட்டாகின. இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தாலும் வெற்றியாலும் பின்னால் பெண்களை மையமாகக் கொண்ட படங்கள் வரத் தொடங்கின.