

நடிகர் ஆர்.கே. புகார் அளித்திருப்பதால், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வடிவேலு.
'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் பேச்சுவார்த்தையில் உடன்பட்டு, மீண்டும் திரையுலகிற்குத் திரும்பவுள்ளார் வடிவேலு. தற்போது பல இயக்குநர்களும் அவரிடம் கதை சொல்லி வருகின்றனர்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணைந்து நடிக்க வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடந்தது. ’இந்தியன் 2’ படத்துக்குப் பிறகு கமல் இயக்கவுள்ள 'தலைவன் இருக்கிறான்' படம், 'தேவர் மகன்' படத்தின் தொடர்ச்சியாகும். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
'தேவர் மகன்' படத்தில் வடிவேலு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததால், அவர் 2-ம் பாகமான 'தலைவன் இருக்கிறான்' படத்திலும் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது இதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஆர்.கே. நாயகனாக நடித்து, தயாரிக்க இருந்த படம் 'நானும் நீயும் நடுவுல பேயும்'. இந்தப் படத்தில் ஆர்.கே.வுடன் நடிக்க வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரும் ஒப்புக் கொண்டதால், முன்பணமாக 1 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர்.
ஆனால், கதை சரியில்லை, மாற்றங்கள் தேவை என நாட்களை வடிவேலு கடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்துள்ளது. எனவே, கொடுத்த முன்பணம் 1 கோடி ரூபாயைத் திரும்பக் கேட்டுள்ளார் ஆர்.கே. அதையும் வடிவேலு திரும்ப அளிக்கவில்லை. இதையே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகாராகக் கொடுத்துள்ளார் ஆர்.கே.
அந்தப் புகாரில், “ 'தலைவன் இருக்கிறான்' படத்தில் வடிவேலு நடிக்கட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை. ஆனால், எனக்குக் கொடுக்க வேண்டிய 1 கோடி ரூபாய் பணத்தைக் கொடுத்தால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இன்னும் 'தலைவன் இருக்கிறான்' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கூட வெளியாகவில்லை. அதற்குள் படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.