

விஜய்யை இயக்குகிறார் மகிழ் திருமேனி என்று வெளியாகியுள்ள செய்திக்கு, விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், கல்லூரியில் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.
மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, விஜே ரம்யா, கெளரி கிஷன் , ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என்று செய்திகள் வெளியாகின. இந்தச் செய்திக்கு விஜய் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரித்தபோது, விஜய் - மகிழ் திருமேனி இருவருடைய சந்திப்பு நடந்துள்ளது. அப்போது மகிழ் திருமேனி கூறிய கதைக்கு விஜய் ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால், இந்தப் படம் விஜய்யின் அடுத்த படமாக இருக்காது என்கிறார்கள்.
ஏனென்றால், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மகிழ் திருமேனி. இதன் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான பணிகளையும், நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகளிலுமே கவனம் செலுத்தி வருகிறார் மகிழ் திருமேனி.
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை முடிப்பதற்கும், விஜய் தனது படத்தை முடிப்பதற்கும் சரியாக இருக்கும் பட்சத்தில் இருவரும் 'தளபதி 66' படத்தில் இணைய வாய்ப்பு இருக்கலாம் என்கிறார்கள். ஆனால், விஜய் - மகிழ் திருமேனி கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகியிருப்பது தெளிவாகியுள்ளது.