மக்களவைத் தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட்டை மிஞ்சிய 'விஸ்வாசம்': ட்விட்டர் அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்

மக்களவைத் தேர்தல், உலகக்கோப்பை கிரிக்கெட்டை மிஞ்சிய 'விஸ்வாசம்': ட்விட்டர் அறிவிப்பால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்
Updated on
1 min read

ட்விட்டர் தளத்தில் உலகக்கோப்பை, மக்களவைத் தேர்தலை ஆகியவைத் தாண்டி 'விஸ்வாசம்' படத்தைப் பற்றியே அதிகப்பேர் பேசியுள்ளனர்.

ரசிகர் மன்றம் கலைப்பு, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தவிர்த்தது போன்ற முடிவுகளை அஜித் எப்போது எடுத்தாரோ அப்போதிலிருந்தே அஜித்துக்கு ரசிகர்கள் வட்டம் பெரிதானது. அவருடைய படம் குறித்த அறிவிப்பு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர், டீஸர் என எது வந்தாலும் ட்விட்டர் தளத்தில் அதைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.

தற்போது அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. 2020-ம் ஆண்டுக்கான ட்விட்டர் கூட்டம் நடைபெற்றது. அதில் 2019-ம் ஆண்டு இந்தியாவில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய ஹேஷ்டேக்குகளை வெளியிட்டுள்ளது ட்விட்டர் தளம். அதில் 'விஸ்வாசம்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

2019-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகியவைத் தாண்டி 'விஸ்வாசம்' படத்தைப் பற்றியே அதிகம் பேர் பேசியுள்ளது உறுதியாகி இருக்கிறது. சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனைகா, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்டது. தமிழகத்தில் இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. தற்போது இந்தியளவில் ட்விட்டர் தளத்தில் முதல் இடத்தைப் பிடித்து மற்றொரு சாதனையை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் தளத்தின் அறிவிப்பின்படி #Viswasam, #LokSabhaElections2019, #CWC19, #Maharshi மற்றும் #HappyDiwali ஆகியவை முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன. இதில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகிரிஷி' திரைப்படம் இந்தியளவில் 4-ம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

'விஸ்வாசம்' படத்தின் இந்தச் சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனம், ட்விட்டர் தளத்தின் அறிவிப்பு நன்றி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in