

ரத்னசிவா இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள 'சீறு' படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடித்த 'றெக்க' படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ரத்னசிவா. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் நாயகனாக ஜீவா நடித்துள்ளார்.
நவ்தீ, சதீஷ், ரியா சுமன், காயத்ரி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் ஜீவாவுடன் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது. இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து இன்னும் ஓரிரு நாட்களில் தணிக்கைக்கு விண்ணப்பிக்க உள்ளது படக்குழு.
இதனிடையே டிசம்பர் 6-ம் தேதி 'சீறு' படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்து ஆலோசனையில் இறங்கியது. தற்போது டிசம்பர் 6-ம் தேதி வெளியீட்டுக்குப் பதிலாக டிசம்பர் 20-ம் தேதியைத் தேர்வு செய்துள்ளது படக்குழு.
இதற்கான காரணம் என்னவென்று விசாரித்த போது, டிசம்பர் 6-ம் தேதி என்பது அரையாண்டுத் தேர்வு காலம். அப்போது வெளியிட்டால் வசூலில் பாதிக்கக் கூடும் என்பதாலேயே டிசம்பர் 20-ம் தேதி வெளியிடலாம் என வேல்ஸ் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.
'சீறு' திரைப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளதால், 'சுமோ' பட ரிலீஸை அடுத்த ஆண்டுக்கு படக்குழு ஒத்திவைத்துள்ளது.