

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தில் கே.எஸ்.ரவிகுமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
விக்ரம் நடிப்பில் உருவாகும் 58-வது படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்து வருகிறார். தற்போது இதன் பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். மேலும், நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். இவர் இந்தியளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'கே.ஜி.எஃப்' படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது இந்தப் படத்தில் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வரும் 'ரூலர்' படத்தை இயக்கி வருகிறார் கே.எஸ்.ரவிகுமார். அந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளைக் கவனித்துக் கொண்டே, விக்ரம் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.