

'சாமி', 'அருள்' கூட்டணியான இயக்குநர் ஹரி மற்றும் விக்ரம் மீண்டும் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
விஜய் மில்டன் இயக்கத்தில் '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். தற்போது ராஜஸ்தானில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமந்தா, பசுபதி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துவரும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வருகிறார். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அக்டோபர் 21ம் தேதி இப்படத்தை வெளியிட இருக்கிறது.
'10 எண்றதுக்குள்ள' படத்தைத் தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கவிருக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விக்ரம். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கவிருக்கும் இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இந்நிலையில், 'சிங்கம் 3' படத்தின் முதற்கட்ட பணிகளில் இருக்கும் இயக்குநர் ஹரி அப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். 'சாமி', 'அருள்' ஆகிய படங்களில் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருப்பதால் இக்கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட்.