

'கேம்பாரி' எனத் தலைப்பிட்டது ஏன் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
'டூரிங் டாக்கீஸ்' படமே தனது கடைசிப் படமாக இருக்கும் என்று அறிவித்தார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஆனால், அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனால், 'கேப்மாரி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அவர் நடிக்காமல், ஜெய்யை நாயகனாக்கி இயக்கியுள்ளார். இது ஜெய் நடிப்பில் வெளியாகும் 25-வது படமாகும்.
அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, சித்தார்த் விபின் உள்ளிட்ட பலர் ஜெய்யுடன் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்தப் படத்துக்கு ஏன் 'கேப்மாரி' எனத் தலைப்பிட்டேன் என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
"தற்போது திரையரங்குகளுக்கு வரும் 80% பேர் இளைஞர்களே. எனவே அவர்களுக்காக ஒரு படம் எடுக்க விரும்பினேன். அவர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, இளைஞர்களைக் கொண்டே இந்தப் படத்தின் கதையை எழுதினேன். இன்றைய இளைஞர்களுக்கு இந்தப் படம் சில புரிதல்களை ஏற்படுத்தும். இன்றைய இளைஞர்கள் ஆடாத ஆட்டமில்லை. அவர்களும் எல்லை மீறும் போது ஏற்படும் பிரச்சினைகளும், சிக்கல்களுமே கதை. அறிவுரையாக இல்லாமல் சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறேன்.
ஆங்கிலேயர் காலத்தில் தொப்பியை மாற்றி மாற்றிப் போட்டு ஏமாற்றுபவர்களை 'கேப்மாறி' விளையாடுபவர்கள் என்று அழைத்தார்கள். பின்னர் 'கேப்மாரி' என்ற வார்த்தை கெட்ட வார்த்தையாக மாறிவிட்டது. ஒரு இளைஞன் 4 பெண்கள் வாழ்க்கையில் விளையாடுகிறான் என்னும் போது இந்தத் தலைப்பு பொருத்தமாக இருந்தது. ஜாலியான பையனாக ஜெய் நடித்துள்ளார்” என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.