

மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள 'சுமோ' படத்தை சீனா மற்றும் ஜப்பானில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
'பிப்ரவரி 14', 'ஆயிரம் விளக்கு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹோசிமின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சுமோ'. மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் நடித்துள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோருடன் சுமோ வீரர் Yoshinori Tashiro-ம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பிரதான காட்சிகளை ஜப்பானில் படமாக்கியுள்ளது படக்குழு. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
இந்தோ-ஜப்பானிஸ் படமான 'சுமோ' சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. சுமோ விளையாட்டு சீனா மற்றும் ஜப்பானில் மிகவும் பிரபலம் என்பதால், இந்தப் படத்தை சீனா மற்றும் ஜப்பானில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகவுள்ளது 'சுமோ'. முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து, குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் இந்தப் படம் உருவாகியிருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.