ஜீத்து ஜோசப் - கார்த்தி - ஜோதிகா இணைந்த 'தம்பி'?

ஜீத்து ஜோசப் - கார்த்தி - ஜோதிகா இணைந்த 'தம்பி'?
Updated on
1 min read

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள படத்துக்கு 'தம்பி' எனத் தலைப்பிட முடிவு செய்துள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. இந்தப் படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான இந்தப் படம் உலக அளவிலான வசூலில் ரூ.100 கோடி என்ற இலக்கைத் தாண்டியுள்ளது.

'கைதி' படத்தை முடித்துவிட்டு, ஒரே கட்டமாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான படத்தை முடித்தார் கார்த்தி. இதில் முதன்முறையாக ஜோதிகாவும் கார்த்தியும் இணைந்து நடித்துள்ளனர். சத்யராஜ், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் கொடைக்கானலைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டது.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் முடிவடைந்து, வெளியீட்டுக்குத் தயாரானது. ஆனால், 'கைதி' படத்தின் தாமதத்தால், ஜீத்து ஜோசப் படத்தின் வெளியீடு தாமதமானது. தற்போது 'கைதி' வரவேற்பால், ஜீத்து ஜோசப் படத்தை டிசம்பர் 20-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு 'தம்பி' எனத் தலைப்பு வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது. சீமான் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'தம்பி'. அதன் தலைப்பு உரிமையை வாங்கி, இந்தப் படத்துக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

விரைவில் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் உள்ளிட்டவற்றை வெளியிட்டு, விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in