

இசையமைப்பாளரான தர்புகா சிவா இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு ‘முதல் நீ முடிவும் நீ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டு வெளியான ‘ராஜதந்திரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தர்புகா சிவா. பின்னர், அதே ஆண்டு வெளியான ‘கிடாரி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். பிரசாத் முருகேசன் இயக்கிய ‘கிடாரி’ படத்தில், ஹீரோவாக சசிகுமார் நடித்தார்.
தொடர்ந்து ‘மோ’ மற்றும் ‘தொடரி’ படங்களில் நடித்த தர்புகா சிவா, ‘பலே வெள்ளையத்தேவா’, ‘நிமிர்’, ‘ராக்கி’ மற்றும் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். இதில், ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இசையமைப்பாளர் யார் எனத் தெரிவிக்காமல், ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று ‘மறுவார்த்தை பேசாதே’ பாடலை கடந்த பிப்ரவரி 10-ம் தேதி வெளியிட்டார் இயக்குநர் கெளதம் மேனன். இன்றளவும் அந்தப் பாடல் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. அந்தப் படத்தில் இடம்பெற்ற அடுத்தடுத்தப் பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்தன. பின்னர், அது தர்புகா சிவாதான் என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் தர்புகா சிவா. அவர் இயக்குநராக அறிமுகமாகும் படத்துக்கு ‘முதல் நீ முடிவும் நீ’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை உரிமையை சோனி மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.