

நடிகை ஹாரத்திக்கு போனில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
1987-ம் ஆண்டு வெளியான ‘வண்ணக் கனவுகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹாரத்தி. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 65-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
தொடர்ந்து, பல படங்களில் காமெடி நடிகையாக நடித்து வருகிறார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகைக்கான தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் முதல் சீஸனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இவருடைய கணவர் கணேஷ்கரும் நகைச்சுவை நடிகர்தான்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 9) பிறந்த நாள் கொண்டாடும் ஹாரத்தி, போனில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஹாரத்தி.
“ஹே... என் குருஜி ரஜினிகாந்திடம் இருந்து ஆசிர்வாதமும் வாழ்த்துகளும் பெற்றுவிட்டேன். தலைவா... என்ன ஒரு எளிமை. என்னைப்போல ஒரு சின்ன நடிகையை அழைத்து, என் பிறந்த நாளில் வாழ்த்தியிருக்கிறார்.
உங்களை... உங்களை மட்டும்தான் விரும்புகிறேன். சூப்பர் ஸ்டார். நீங்கள் நீடுழி வாழவேண்டும், ஆரோக்கியமாக, அமைதியாக. என்றும் எங்களை ஊக்கப்படுத்த வேண்டும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஹாரத்தி. இவர் ஆர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.