

கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படத்தின் வசூல், உலக அளவில் 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
கார்த்தி, நரேன், தினா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கைதி'. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலுமே டப்பிங் செய்யப்பட்டதால், இதர மொழிகளின் ரீமேக் உரிமைக்குக் கடும் போட்டி நிலவி வருகிறது.
'பிகில்' படத்துக்குப் போட்டியாக வெளியானதால், முதல் வாரத்தில் 250 திரையரங்குகளில்தான் வெளியானது. ஆனால், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்ததால், தொடர்ச்சியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது 3 வாரங்களில் இந்தப் படம் 350 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளதாக, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், சென்னையில் 'பிகில்' திரையிடப்பட்டு வந்த முக்கியத் திரையரங்குகளில் 'கைதி' மாற்றப்பட்டுள்ளதால், படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. சென்னையைத் தாண்டிய பல ஊர்களிலும் இதே நிலைதான் நீடித்து வருகிறது. இதனிடையே, 'கைதி' படத்தின் வசூல் தொடர்பாக விநியோகஸ்தர்களிடம் விசாரித்தபோது, 2019-ம் ஆண்டில் நல்ல லாபம் கொடுத்த படங்கள் வரிசையில் 'கைதி' இணைந்துவிட்டது என்றனர்.
மேலும், 'கைதி' படத்தின் திரையரங்க டிக்கெட், தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவற்றின் மூலம் வந்த மொத்த வசூல் சுமார் 110 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் குறிப்பிட்டனர். நல்ல கதை, சரியான பொருட்செலவு, போதிய விளம்பரம் என அனைத்துமே கச்சிதமாக அமைந்த படம் 'கைதி' என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கைதி' படத்துக்குப் பிறகு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது.