என் சாவைக் கண்ணால் பார்த்தேன்: விஷால்

என் சாவைக் கண்ணால் பார்த்தேன்: விஷால்
Updated on
1 min read

என் சாவைக் கண்ணால் பார்த்தேன் என்று 'ஆக்‌ஷன்' படப்பிடிப்பு அனுபவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் தெரிவித்தார்.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் 'ஆக்‌ஷன்'. ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

நவம்பர் 15-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக லண்டனில் நடைபெற்றுவரும் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்தார் விஷால். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால் பேசியதாவது:

“சமூக சிந்தனைகள் இருந்தாலும் சம்பாத்யம்தான் முதலில் முக்கியம் என்று எனக்குப் புரியவைத்தவர் இயக்குநர் சுந்தர்.சி. ‘சங்கமித்ரா’தான் சுந்தர்.சி-யின் கனவுப்படம். ஆனால், அந்தப் படம் தாமதமாவதால் இந்தப் படத்தை உருவாக்கினோம். என் திரையுலக வாழ்க்கையில் அதிகமான சண்டைக் காட்சிகள் கொண்ட படமும், அதிகமாக அடிபட்ட படமும் ‘ஆக்‌ஷன்’தான்.

ஏனென்றால், ஒரு கணத்தில் என் சாவைக் கண்ணால் பார்த்தேன். ஒரு சண்டைக் காட்சியில் கையிலும் காலிலும் அடிபட்டதால், 5 மாதங்கள் படப்பிடிப்பு நடக்கவில்லை. எனக்கு அடிபட்ட பிறகு, அன்பறிவ், சுந்தர்.சி ஆகிய மூவரும் சண்டைக் காட்சிகளில் டூப் போட வேண்டுமென்று எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை.

வருடம் ஒருமுறை சுந்தர்.சி-யுடன் பணியாற்றினால், உடல்நிலை நன்றாக இருக்கும். என் குருநாதர் அர்ஜுன் தான். ஆனால், ஒவ்வொருவரும் ஈகோ பார்க்காமல் சுந்தர்.சி-யுடன் உதவி இயக்குநராகப் பணிபுரிய வேண்டும். ஒரு சாதாரண இடத்தையும் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்துவார். 90 நாட்களில் இப்படத்தை முடித்தது சவாலான விஷயம்.

உதவி இயக்குநராக அவரிடம் நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு இப்படத்தின் மூலம் அமைந்தது. அவரிடம் கற்றுக்கொண்டதை இனிவரும் என் படங்களில் பயன்படுத்துவேன். ஆதி மாதிரியான திறமையான இளம் இசையமைப்பாளர்கள் பலர் வரவேண்டும்.

சண்டைக் காட்சிகளில் எனக்கும் தமன்னாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது. நான் இதுவரை பெண்களை அடித்ததே கிடையாது. ஆனால், இப்படத்தில் வரும் காட்சிக்காக அக்கன்ஷாவை பலமுறை அடித்தேன். அதற்காக இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடிபடாமல் இருப்பதற்காக சிறப்பு உடை கொடுத்தனர். ஆனால், அக்கன்ஷா அதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல், அடிபட்டாலும் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடித்து முடித்தார். சாயா சிங்குடன் நடித்ததில் மகிழ்ச்சி. எனக்கு நல்ல நண்பர் கிடைத்திருக்கிறார். யூ ட்யூப்பில் ஷாராவின் குறும்படத்தைப் பார்த்தேன். தைரியமாக நடித்திருக்கிறார். மிகவும் திறமையான நடிகர்.”

இவ்வாறு விஷால் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in