இயக்குநரின் நடிகர் விஷால்: சுந்தர்.சி புகழாரம்

இயக்குநரின் நடிகர் விஷால்: சுந்தர்.சி புகழாரம்
Updated on
2 min read

இயக்குநரின் நடிகர் விஷால் என்று 'ஆக்‌ஷன்' பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் சுந்தர்.சி புகழாரம் சூட்டினார்.

'அயோக்யா' படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் 'ஆக்‌ஷன்'. ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, ஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

நவம்பர் 15-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக லண்டனில் நடைபெற்றுவரும் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பில் இருந்து சென்னை வந்தார் விஷால்.

சுந்தர்.சி, பத்ரி, விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் 'ஆக்‌ஷன்' பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர். இதில் இயக்குநர் சுந்தர்.சி பேசியபோது, "இது என்னுடைய கனவுப்படம் என்று கூறலாம். முதன்முதலாக நான் கிராமப் பின்னணி கொண்ட படத்தை இயக்கினேன். அதைப்பார்த்த பலரும், ‘இது உன்னுடைய படம் மாதிரி தெரியலயே...’ என்று கேட்டனர். இந்தக் கேள்வியை நான் ஒவ்வொரு படத்திலும் சந்தித்தேன். எதுதான் என்னுடைய படம், என்னுடைய படம் எந்தப் பாணியில் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர் என்று குழப்பமடைந்தேன். 'ஆக்‌ஷன்' பார்த்துவிட்டு, ‘இது என்னுடைய படம்’ என நினைப்பார்கள் என்று கருதுகிறேன்.

தமன்னாவை எனக்குப் பிடிக்கும். எனது ஒவ்வொரு படத்திலும் அவரை நடிக்கவைக்க முயற்சி செய்தேன். அது, 'ஆக்‌ஷன் ' படத்தில் நிறைவேறியுள்ளது. ‘பாகுபலி’ படத்தில் தமன்னாவின் சண்டைக் காட்சிகளைப் பார்த்தேன். அவர்தான் இந்த படத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று அவரை நடிக்க வைத்தேன். இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் தமன்னா டூப் போடாமல் தைரியமாக நடித்தார். இதுவரை இப்படியொரு நாயகி தமிழ் சினிமாவில் இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். தமன்னா, அக்கன்ஷா இருவரும் தினமும் படப்பிடிப்பு முடிந்து போகும்போது காயத்தோடுதான் போவார்கள். மலையாளத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த அனைத்துப் படங்களும் மாபெரும் வெற்றியடைந்துள்ளன. தமிழில் அவருக்கு இது முதல் படம்.

இந்தப் படத்தில் எனக்குப் பக்கபலமாக அன்பறிவ் இருவரும் இருந்தார்கள். அடுத்து ஹிப்ஹாப் ஆதி. முதலில் இந்தப் படத்தை ஆதிக்கு கொடுக்கக்கூடாது என்றிருந்தேன். ஆனால், என்னிடமிருந்து இசையமைப்பாளர் வாய்ப்பைப் பிடுங்கிச்சென்று இசையமைத்தார். நான் நினைத்ததைவிட வேகமாகப் பணியை முடித்துவிட்டார். ராணுவம், தீவிரவாதம், அரசியல் என அனைத்துமே இந்தப் படத்தில் உள்ளன. இதில் வில்லி கிடையாது. வில்லன் யார் என்பது சஸ்பென்ஸ். படம் பார்க்கும் போதுதான் அது தெரியும்.

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளில் பணிபுரிந்த அனைவருமே சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள்தான். சென்னையில் இந்தளவு உயர்தரமான காட்சிகளைக் கொடுக்க முடியுமா? என்று அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும்.

விஷாலைப் பொறுத்தவரை, அவர் இயக்குநரின் நடிகர். அவரை ஒப்பந்தம் செய்துவிட்டால், நாம் என்ன சொல்கிறோமோ, அதை அர்ப்பணிப்போடு செய்வார். இந்தப் படத்துக்காக மேலிருந்து குதிக்கச் சொன்னேன். உடனே குதித்துவிட்டார். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in