திரையரங்க உரிமையாளர்களைத் தயவுசெய்து திட்டாதீர்கள்: ரோகிணி பன்னீர்செல்வம் வேண்டுகோள்
திரையரங்க உரிமையாளர்களைத் தயவுசெய்து திட்டாதீர்கள் என்று ரோகிணி பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கியுள்ள படம் 'மிக மிக அவசரம்'. ஸ்ரீபிரியங்கா, ஹரீஷ் குமார், சீமான், முத்துராமன், ஈ.ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை, லிப்ரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 11-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படத்துக்கு, போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் சர்ச்சை உண்டானது.
இதனைத் தொடர்ந்து திரையரங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று, தற்போது 125-க்கும் அதிகமான திரையரங்குகளில் 'மிக மிக அவசரம்' வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்களுக்கும், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில், படக்குழுவினரோடு ரோகிணி பன்னீர்செல்வம், அபிராமி ராமநாதன், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரோகிணி பன்னீர்செல்வம் பேசியபோது, “அரசாங்கத்தில் பல விருதுகள் வழங்குகின்றனர். நன்றாகப் பராமரிக்கப்படும் திரையரங்குகள் என்ற விருதையும் வழங்கினால் நன்றாக இருக்கும்.
எந்தப் படமாக இருந்தாலும், அதை இணையதளத்திலும் ஆன்லைனிலும் பார்க்காமல், திரையரங்கில் பார்த்தால் மட்டுமே அது பெரிய படமாகக் கருதப்படும். சின்ன படங்கள் ஓடவேண்டும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். திரையரங்குகளுக்கு வருவதற்குமுன் இந்தப் படம் ஓடும், ஓடாது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், வரும் அத்தனைப் படங்களும் ஓடவேண்டும் என மற்ற யாரையும்விட திரையரங்கு உரிமையாளர்கள் மட்டுமே நினைக்கிறோம்.
இந்தப் படம் ரிலீஸ் ஆகாதபோது, சுரேஷ் காமாட்சி எங்களையெல்லாம் திட்டி பேட்டி கொடுத்தார். அதில் எங்களுக்குக் கொஞ்சம் வருத்தம் உண்டு. எங்களுக்குப் பாரபட்சம் எதுவுமில்லை. தற்போதுள்ள அமைச்சரிடம், பெரிய திரையரங்குகளைச் சிறிய திரையரங்குகளாக மாற்றுவதற்கு அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். அப்படிச் செய்துவிட்டால், அதன்பிறகு உங்கள் படத்தை எங்களுக்குத் தாருங்கள் என உங்கள் வாசலில் நாங்கள் வந்து நிற்போம். ஆகவே, எங்களைத் தயவுசெய்து திட்டாதீர்கள்” என்றார்.
