

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவந்த படத்தின் லண்டன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனுஷ் படங்களில், 100 கோடி வியாபாரத்தைத் தாண்டிய முதல் படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வெளியாகும் முன்பே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார் தனுஷ்.
லண்டனில் பிரதானக் காட்சிகளைப் படமாக்க ஒட்டுமொத்தப் படக்குழுவும் சென்றது. ஐஸ்வர்யா லட்சுமி, மலையாள நடிகர் லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் தனுஷுடன் நடித்துள்ளனர். இவர்களோடு, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவும் நடித்துள்ளார்.
'அசுரன்' படத்தின் வெற்றியை கொண்டாடக்கூட தனுஷ் இந்தியா வரவில்லை. முழுமையாக கார்த்திக் சுப்பராஜ் படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது 64 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்த படப்பிடிப்பு முடிவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இதரக் காட்சிகளைப் படம்பிடிக்க ஆயத்தமாகவுள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா பணிபுரிந்து வருகிறார். அடுத்த ஆண்டு (2020) கோடை விடுமுறைக்கு வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது.